கரூர்: "காவிரி கதவணையில் கலைஞருக்குச் சிலை" - செந்தில் பாலாஜி தகவல்

கரூர்: “காவிரி கதவணையில் கலைஞருக்குச் சிலை” – செந்தில் பாலாஜி தகவல்

கரூர்: "காவிரி கதவணையில் கலைஞருக்குச் சிலை" - செந்தில் பாலாஜி தகவல்

“கலைஞர் ஆட்சியில் கரூர் மாவட்ட மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருந்தது. பல்வேறு சிறப்புத் திட்டங்களைக் கொண்டு வந்ததால் தமிழ் மக்களின் வாழ்வும், வளமும் உயர்ந்து உள்ளது” என்று செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் 102 இடங்களில் நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட தி.மு.க சார்பில் நடைபெற்றது.

கரூர் மாவட்டம், நங்கவரம் பகுதியிலும், மாயனூர் காவிரி கதவணைப் பகுதியிலும் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மலர் தூவி அஞ்சலி செலுத்தி, இனிப்புகள் வழங்கினார்.

தொடர்ந்து, காவிரி கதவணையைப் பார்வையிட்ட அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “கலைஞரின் ஆட்சியில் கரூர் மாவட்டம் பல்வேறு திட்டங்களால் சிறப்படைந்தது. கலைஞர் ஆட்சி பொற்கால ஆட்சி. அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பொற்கால ஆட்சி வழங்கி வருகிறார்.

கலைஞர் ஆட்சியில் கரூர் மாவட்ட மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருந்தது. பல்வேறு சிறப்புத் திட்டங்களைக் கொண்டு வந்ததன் தொடர்ச்சியாகத் தமிழ் மக்களின் வாழ்வும், வளமும் உயர்ந்து உள்ளது.

ஏழை மக்களுக்கு நலத்திட்டங்கள் கிடைக்கப் பெற்று வருகின்றன. கலைஞரின் பொற்கால ஆட்சியின்போது கடந்த 2008-ல் கரூர் மாவட்டம், மாயனூரில், காவிரியின் குறுக்கே கதவணை கட்டப்பட்டது.

காவிரி -குண்டாறு இணைப்பு திட்டம் முன்னோடி திட்டமாக உள்ளது. காவிரி, குண்டாறு, வைகை இணைப்பு திட்டம் நீண்டதொரு பயணம் மேற்கொள்ள வேண்டியது உள்ளது. நிறைய இடங்கள் கையகப்படுத்த வேண்டி உள்ளது.

நிறைய நிதிகள் தேவைப்படுகிறது. அதன் நீண்ட பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மாயனுர் கதவணை பகுதியில் கருணாநிதி உருவச் சிலை வைக்க முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Scroll to Top