கரூர் திருமாநிலையூரில் புதிய பேருந்து நிலையத்தை தமிழக துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

Deputy CM Udhayanidhi Emphasizes Dravidian Values and Public Service During Karur Visit with V. Senthil Balaji
Deputy CM Udhayanidhi Emphasizes Dravidian Values and Public Service During Karur Visit with V. Senthil Balaji

கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வந்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.

நேற்று காலை 10 மணியளவில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு திட்டப் பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

அப்போது, கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழக அரசின் முன்னாள் அமைச்சரும், கரூர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான, செந்தில் பாலாஜி, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, எம்.எல்.ஏ-க்கள் மாணிக்கம், மொஞ்சனுர் இளங்கோ, சிவகாமசுந்தரி, அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் என்று பலரும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், தமிழக அரசின் செயல்பாடுகள் அரசின் நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு சென்றுள்ளதா?. திட்டங்களை செயல்படுத்துவதில் இடையூறு உள்ளதா?. அரசிடம் சமர்பித்த திட்டங்களுக்கு  நிதி ஒதுக்கப்படாமல் இருக்கிறதா, மக்களுக்கு இன்னும் என்னென்ன தேவைகள், திட்டங்கள் தேவைப்படுகின்றன என்பது  குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து, ரூ.40 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட திருமாநிலையூர் பகுதியில் கரூர் மாநகராட்சி முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி பேருந்து நிலையம் உள்ளிட்ட கரூர் மாவட்டத்தில் ரூ.58.25 கோடி மதிப்பீட்டில், 13 முடிவுற்ற திட்டப் பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மேலும், ரூ. 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வைரமடை பகுதியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில், காவிரி மீட்புக் குழுவின் உறுப்பினர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முத்துசாமிக்கு திருவுருவ சிலை அமைக்கும் பணியை  துவக்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து, விலையில்லா வீட்டுமனை,  இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர், விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள் மூலம் ரூ.162.22 கோடி மதிப்பீட்டில் சுமார் 18,331  பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. அதன்பிறகு, அந்த விழாவில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்,

“அரசு வழங்கும் திட்டத்தை மாநாடு போல ஏற்பாடு செய்து, அதை மூன்று நாள்களுக்குள் இவ்வளவு பெரிய நலத்திட்ட உதவி நிகழ்ச்சியை நடத்த முடியுமா என்றால் அது  கரூர் மாவட்டத்தில் மட்டும்தான் சாத்தியம்.

இன்றைக்கு இந்த நிகழ்ச்சிக்கு நான் பங்கேற்க கிளம்பும்பொழுது 5 மணி வெளியில் வந்து 6 மணிக்கு தான் வந்தேன். வழிநெடுகிலும் மக்கள் வரவேற்பு அளித்தனர். கரூர் என்றாலே ஸ்பெஷல் தான். அதில் முதல் காரணம், முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஐந்து முறை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வென்றுகாட்டிய ஒரே தலைவர் நம்முடைய கலைஞர்.

அதற்கெல்லாம், தொடக்கமாக இருந்தது கரூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய குளித்தலை தொகுதிதான். அப்படிப்பட்ட கரூருக்கு வந்து உங்களை எல்லாம் சந்திப்பதில் எனக்கு கூடுதல் பெருமை.

18,000 பேர்களுக்கு நலத்திட்டங்களை கொடுத்திருக்கிறோம். அது 18,000 குடும்பங்களுக்கான நலத்திட்டங்கள் என்றுதான் அர்த்தம். மக்களின் பலவருட கோரிக்கை, கரூருக்கு புதிய பேருந்து நிலையம் வேண்டும் என்பது. அதை திறக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளீர்கள். ஆனால், அந்த பேருந்து நிலையம் வரக்கூடாது என்று பலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அதனை, செந்தில் பாலாஜி அவர்கள் தனக்கே உரிய பாணியில் கோர்ட்டுக்கு சென்று வென்று தற்போது பேருந்து நிலையம் திறக்க வழிவகுத்துள்ளார்.

 13,124 பேருக்கு இன்றைக்கு வீட்டுமனை பட்டாவையும் வழங்கி இருக்கின்றோம். பொதுமக்களின் தேவை இருக்க இடம், உண்ண உணவு, உடுத்த உடை. இதுதான் ஒவ்வொரு மனுசனுக்கும் தேவையான அத்தியாவசியமான பொருட்கள். அதில், இருக்க இடம் என்ற தேவையை பூர்த்தி செய்ய நமது முதல்வர், ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் ஆணைகளை வழங்க சொல்லி, வழங்கியிருக்கிறோம்.

கரூர் மாவட்டத்தில் மட்டும் காலை உணவு திட்டத்தில் 31,000 பிள்ளைகள் தினமும் பயன்பெறுகிறார்கள். கலைஞர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது.தேர்தலை மனதில் வைத்து திராவிட மாடல் அரசு செயல்படவில்லை. எதிர்காலத் தலைமுறைக்காக தி.மு.க அரசு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.

அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அம்பாசிடர், தமிழக மக்கள் தான் என திமுக அரசு நம்புகிறது. கரூர் மாவட்டத்தில் மாவட்ட விளையாட்டு மைதானத்தை மேம்படுத்தும் பணி துவக்கப்பட உள்ளது. நவீன நீச்சல் குளம், கரூர் மாநகராட்சி சார்பில் அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது” என்றார்.

Scroll to Top